தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் - சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும் , சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத் தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிக்கைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை 'தினத்தந்தி' பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிக்கையோ, சினிமா என்ற அறிவியலின் தொழில்நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் 'மேதைமையையும்' வியந்தோறுகின்றன.
எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குரித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசப்பத்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலன் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன. முக்கியமான ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ·பார்முலாவில் குழைக்கப்பட்டு , ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம், இந்த ரசிகர்களில் சாதாரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்ன பிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.
அதனால் தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கல் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.
செல்வாக்கு மிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை,அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள் , எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.
வெளியீடு & தொடர்புக்கு:
***********************************
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,
சென்னை. 600 083.
தொலை பேசி - 044-23718706.
..
பக் 205, விலை ரூ 70
..
..
கிடைக்குமிடம்
******************
******************
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367



































No comments:
Post a Comment