தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாகத் தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை இந்த நூல் அம்பலம் செய்கின்றது. இதன் மூலம் குறுந் தேசிய இனவாதப் போராட்டத்தை தேசிய போராட்டமாக மாற்றுவதன் தேவையை, மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்த சிறு நூலின் ஊடாக உங்கள் முன் வைக்கின்றேன்.
பெரும்பான்மை இனங்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படையான தேசிய நலன்களை, சகல இனவாத தேசியவாதிகளும் எப்படி குறுகிய நலனில் வைக்கின்றனர் என்பதையும் இந்த நூல் தெளிவாக்குகின்றது. இதன் மூலம் இலங்கையின் தேசிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக்குகின்றது. பரஸ்பரம் இனங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதும், மக்களின் நலனை முதன்மைப்படுத்திய தேசியத்தை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அரசியல் ரீதியாக தெளிவாக வைப்பது நூலின் மைய நோக்கமாகும்.
சுயநிர்ணயம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு இலங்கையின் சுயநிர்ணயம் அவசியமானது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், அவர்கள் நடைமுறைப்படுத்தும் மறுகாலனியாக்க உலகமயமாதலுக்கு எதிராகவும் தேசியத்தை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இந்த நூல் தெளிவுபடுத்துகின்றது. மக்களின்; இன ஐக்கியம் இதற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துன்றது. இனவாதிகள் பிரித்தாளும் இனவாதக் கோசங்களின் ஊடாக தேச விரோதிகளாக இருப்பதுடன், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்திய உலகமயமாதலின் உற்பத்தி கூறுகளையும், அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் எதிர்ப்பவர்கள் அல்ல. இது அவர்களின் தேசியம் பற்றி அளப்பதற்கு ஒரு அடிப்படையான அளவு கோல் மட்டுமின்றி, உலகமயமாதலை வரவேற்பவர்களாகவும் ஒரு தரகர்களாகவும் இருக்கின்றனர்.
இடைக்கால தீர்வு என்ற போர்வையில் முன்வைக்கின்ற அனைத்தும் வரலாற்று ரீதியாக இனவாதத்தையும், தொடர்ந்த நிரந்தரமான ஒரு அரசியல் பிழைப்புவாத வழியாகவே முன்வைக்கின்றனர். உலகமயமாதல் தேசியத்தை அழிப்பதற்குரிய தூண்களாக இனத் தேசியத்தை பயன்படுத்துகின்றனர். இனபிரச்சனைக்கு ஒரு ஜனநாயக பூர்வமான தீர்வை முன்வைப்பதற்குப் பதில், அதீதமான சலுகைகளை முன்வைப்பது அல்லது மற்றொன்றை மறுப்பது இலங்கையின் எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளினதும் இன்றைய நிலையாகும்;. இது சமாதானத்துக்கும், மக்களின் அடிப்படையான வாழ்வியலுக்கும் எதிரானது. ஒரு சமாதானத்துக்கு அவசியமானது, இனவாத யுத்தத்தின் மீதான அனைத்து ஜனநாயக விரோதமான கோரிக்கைகளையும் செயல்களையும் இவற்றுக்கிடையில் பக்கம் சாராது விமர்சிப்பதும் செயற்படுவதுமாகும்;. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கை இனவாத அரசியல் களத்தில் உள்ளவர்கள், இதில் ஏதோ ஒன்றைச் சார்ந்து நின்று, மற்றையவற்றை அதீதமாக விமர்சிப்பதன் மூலமும், செயற்படுவதன் மூலமும் இனவாதம் ஆழமாக மேலும் புரையோடுகின்றது. சமாதானமும், மக்களின் வாழ்வியலும் மேலும் இனவாத யுத்த கொடூரங்களால் பலியிடப்படுகின்றது.
விமர்சனமும், மாற்று செயல்முறையும் மட்டுமே சமாதானத்துக்கும், அடிப்படையான மக்களின் விடுதலைக்கும், மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் அடிப்படையான செயல் முறையாகும்;. இது இனவாதம் மற்றும் குறுந்; தேசிய இனவாதம் என்று அனைத்தையும் எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி போராடி இனத்தேசியத்துக்கு பதில் தேசியத்தை உருவாக்க வேண்டும்.
இந்த சிறு நூலுக்குரிய கட்டுரைகளை சமர் கட்டுரைகளாகயாக எழுதத் தொடங்கினேன். சமூக முக்கியத்துவம் கருதி அவை சிறு நூலாகவே வெளிவருகின்றது. இந்த நூலில் பயன்படுத்திய புள்ளிவிபரங்கள், பத்திரிகைகள் மற்றும் வேறு நூல்களில் எடுக்கப்பெற்றன. இந்த புள்ளிவிபரங்கள் சில முழுமையற்றவையாக இருந்தாலும், இதன் பொதுத் தன்மைகளும் சமூக விளைவுகளும் சரியானவையாகும்;. நூலின் மையமான அரசியல் செய்தியை இவை எந்த விதத்திலும் பாதிக்கமாட்டாது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையில் தொடங்கிய இந்த சிறு வெளியீடு, பல்வேறு விடையங்களை முழுமையாக இங்கு ஆய்வுக்கு எடுக்கவில்லை. ஆனால் குறிப்பான விடையத்தை முதன்மைப்படுத்தியே இதை எழுத நேர்ந்தது.
பி;. இரயாகரன்
..
கிடைக்குமிடம்
-------------------------------------
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
------------------------------------
பக்கங்கள் 117
விலை 4 ஈரோ
No comments:
Post a Comment