இந்த பூமியில் பேராற்றல் மிக்கவன் ஒருவன் உண்டு.
..
அவனது கைகள் இயங்குகிற வாகனம் ஒன்றை இலகுவாகப் பிடிக்கும்.
..
அவனது கால்கள் ஒரே நாளில் பல்லாயிரம் மைல்களைக் கடக்கும்.
அவனது இறக்கைகள் அவனை மேகங்களுக்கு மேலே, எந்த ஒரு பறவை பறப்பதைக் காட்டிலும் தூக்கிச் செல்லும்.
..
அவனது துடுப்புகள் எந்த ஒரு மீனை விடவும் வலிமை பெற்றவை.
..
அவனது கண்கள் காண முடியாததைச் காண்கிறது.
அவன் காதுகள் உலகின் மறுபாதியில் பேசப்படும் வார்த்தைகளைக் கேட்கிறது.
..
அவன் அத்தனை வல்லமை பெற்றவன், அவனால் மலைகளைக் குடைந்து செல்ல முடியும், நடு வானிலேயே அவனால் அருவியைத் தடுத்து நிறுத்த முடியும்.
..
அவன் பூமியின் தோற்றத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறான். காடுகளை உண்டாக்குகிறான், கடல்களை இணைக்கிறான், பாலைவனங்களுக்கு நீரைக் கொண்டுவருகிறான்.
..
யார் அந்த வல்லமை மிக்கவன்?
..
மனிதன்.
..
ஆனால் அவன் எங்ஙனம் வல்லமை மிக்கவனானான்? பூமியின் எசமானனாக எப்படியானான்? இதுதான் இந்நூலின் கதை.
..
மனிதன் தோன்றிய வரலாறு
பூமியின் வரலாற்றை விஞ்ஞானிகள் ஐந்து யுகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய யுகமானது கைநஸோயிக் யுகம் - புத்துயிருழி யுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யுகத்தினுடைய ஆயுள்காலம் 65-67 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இதற்கு முந்தியது மெஸஸோயிக் யுகம் (இடையிரூழி யுகம்), பாலியொஸோயிக் யுகம் (தொல்லுயிரூழி யுகம்). மிகவும் பழைய யுகங்கள் புரோதேரஸோயிக் மற்றும் ஆர்கேயிக் யுகங்களாகும். ஆர்கேயிக் யுகத்தின் கடைசியிலிருந்து மிகவும் எளிமையான உயிரினங்கள் தோற்றத்திலிருந்தும் நாம் மூன்று பில்லியன் ஆண்டுகளால் பிரிக்கப்பட்டிருக்கிறோம்.
..
ஒவ்வொரு யுகமும் காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. புத்துயிரூழி யுகமானது கீழ்வருமாறு பிரிக்கப்பட்டிருக்கிறது:
குவாடர்னரி காலம் அல்லது ஆன்த்ரொஜேன். இந்த காலத்தில்தான் மனிதன் தோன்றினான். அந்த நேரத்தில் ஐரோப்பாவிலும் சைபிரியாவிலும் கம்பளியானைகள் இருந்தன;
டெர்டியரி காலம், அப்போது கம்பளி யானைகளின் 'யுகம்' தொடங்கியது;
நியோஜேன்;
பாலியோஜேன்.
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், ஆன்த்ரொபஜேன் யுகத்தின் தொடக்கத்தில், நிமிர்ந்த நிலையில் இரண்டு கால்களாலும் நடக்கக் கூடிய ஒரு விசேட வகையான குரங்குகளிலிருந்து பித்தெகாந்த் ரோபஸ் அல்லது குரங்கு மனிதர்கள் என்ற மனிதனுடைய மூதாதையர்கள் தோன்றினார்கள் . அவர்களிலிருந்து வரலாற்றுக்கு முந்திய, பண்டைய மனிதர்கள் (நியாண்டர்தால் மனிதர்கள்), மேலும் நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நவீனகால மனிதர்கள் தோன்றினார்கள்.


"யுனெஸ்கோ கூரியர்" ஆகஸ்ட்- செப்டம்பர் 1972 இதழில்
ஆர்.ஸாலிகெர் தந்த விளக்கம்.
நூலில் இருந்து
எம்.இலியீன்,யா.ஸெகால்
ராதுகா பதிப்பகம்
மாஸ்கோ
பக்கங்கள் 256
கிடைக்குமிடம்
பழைய புத்தகக் கடைகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(கொஞ்சம் சிரமம்தான்)